தேவேந்திர சங்க வகுப்பு
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தானாந்தன தந்தன தானாந்தன தந்தன
தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை
சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை
தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி
இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள்
இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின் யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ
ளுங்குயில்
இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெடவிடுமன கரதல ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை
எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள் ஏகாந்தசு கந்தரு பாசாங்குச சுந்தரி
கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ்
கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்
கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு
கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர் காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன்
அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில் வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கு
மரன்குகன்
அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள் தார்வேய்ந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன்
அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்
அதிபதி யெனவரு பொருதிறல் முருகனை அருள்பட மொழிபவர் ஆராய்ந்துவ ணங்குவர் தேவேந்திர சங்கமே.
சுருக்கவுரை
முருகன் அடியார் பெருமை.
- இரணியனைச் சங்கரித்தவள்,
- பலியோடு ஏந்தினவள்,
- நடனம் புரிபவள்,
- வேதாந்தத்தில் விளங்குபவள்,
- எரி நிறத்தினள்,
- தாமரை மொட்டன்ன கொங்கை, மெல்லிய திருவடி இவைகளைக் உடையவள்,
- அசுரர்களைச் சங்கரித்தவள்,
- மடமயில் போன்றவள், இளநீர் அன்ன கொங்கையள்,
- நூல் போன்ற இடையை உடையவள்,
- யமதூதர்களை கண்டு அஞ்சும் போது என்னை அஞ்சல் என்று ஏன்று கொள்பவள்,
- இரவலர்க்கு பலியிடும் அறத்தினள்,
- திருவடியைத் தியானிக்கும் மௌன ஞானிகளுக்குச் சுகம் அளிப்பவள்,
- வினையை ஒழிப்பவள்,
- நாகபூஷணி,
- நீலநிற ஆடையள்,
- நினையாதவர்களின் உயிரை நீக்கும் பயிரவி,
- காதிற் கழுநீர்ப்பூ அணிந்தவள்,
- தனது திருவருளால் உலகையும் கடலையும் புரந்தளிப்பவள்
ஆகிய பார்வதி பெற்ற குமாரன்
- மேரு பொடிபட, கடல் சுவற, வேலை ஏவினவன்,
- செந்தமிழ் நூல் விரித்தவன்,
- குமரன், குகன், அறுமுகன், பன்னிருபுயன், வள்ளிநாயகன், பகைவர்க்கு அந்தகன்,
- கணபதியைச் சதாகாலமும் தியானிப்பவர்களின் சிந்தையில் வாழ்பவன்,
- செந்திலதிபனாகிய முருகனை
அவனது திருவருள் பெறும் வகையில் போற்றுபவர்கள் யார் யார் என்று தேர்ந்தெடுத்து அவர்களைத்
தேவேந்திரக் கூட்டங்கள் வணங்கி நிற்கும்.
முருகன் திருநாமத்தை மொழிபவர் இவர் என ஆராய்ந்தறிந்து அவர் தமைத் தேவேந்திர சங்கமும் வணங்கும் என்பது இவ்வகுப்பின் கருத்து.
பொழிப்புரை
பொழிப்புரை