சீர்பாத வகுப்பு

சுருக்கவுரை
பொழிப்புரை

தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதான தானதன


உததியிடை கடவுமர கதவருண குலதுரக வுபலளித கனகரத சதகோடி சூரியர்கள்

உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை யுகமுடிவின் இருளகல ஒருசோதி வீசுவதும்

உடலுமுட லுயிருநிலை பெறுதல்பொரு ளெனவுலக மொருவிவரு மநுபவன சிவயோக சாதனையில்

ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகி யுணர்வுவிழி கொடுநியதி தமதூடு நாடுவதும்

உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவு முழலுவன பரசமய கலையார வாரமற

உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ வுளபடியை யுணருமவ ரநுபூதி யானதுவும்

உறவுமுறை மனைவிமக வெனுமலையி லெனதிதய வுருவுடைய மலினபவ சலராசி யேறவிடும்

உறுபுணையு மறிமுகமு முயரமரர் மணிமுடியில் உறைவதுவு முலைவிலது மடியேன் மனோரதமும்

இதழிவெகு முகககன நதியறுகு தறுகணர இமகிரண தருணவுடு பதிசேர் சடாமவுலி

இறைமகிழ வுடைமணியொ டணிசகல மணிகலென இமையமயில் தழுவுமொரு திருமார்பி லாடுவதும்

இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயி றெரிபுகுத வுரகர்பதி அபிஷேக மாயிரமும்

எழுபிலமு நெறுநெறென முறியவட குவடிடிய இளையதளர் நடைபழகி விளையாடல் கூருவதும்

இனியகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும் இலகுவெகு கடவிகட தடபார மேருவுடன்

இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற எழுபுவியை யொருநொடியில் வலமாக வோடுவதும்

எறுழிபுலி கரடியரி கரிகடமை வருடையுழை யிரலைமரை யிரவுபகல் இரைதேர்க டாடவியில்

எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடிய இனிதுபயில் சிறுமிவளர் புனமீ துலாவுவதும்

முதலவினை முடிவிலிரு பிறையெயிறு கயிறுகொடு முதுவடவை விழிசுழல வருகால தூதர்கெட

முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையுமவை முடியவரு வதுமடியர் பகைகோடி சாடுவதும்

மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறு முறியுமலர் வகுளதள முழுநீல தீவரமும்

முருகுகமழ் வதுமகில முதன்மைதரு வதும்விரத முநிவர்கரு தரியதவ முயல்வார் தபோபலமும்

முருகசர வணமகளிர் அறுவர்முலை நுகருமறு முககுமர சரணமென அருள்பாடி யாடிமிக

மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவி முழுகுவதும் வருகவென அறைகூவி யாளுவதும்

முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழு துலகறிய மழலைமொழி கொடுபாடும் ஆசுகவி

முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுன முகுளபரி மளநிகில கவிமாலை சூடுவதும்

மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென

வருகருணை வரதனிகல் இரணியனை நுதியுகிரின் வகிருமட லரிவடிவு குறளாகி மாபலியை

வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய வளருமுகில் நிருதனிரு பதுவாகு பூதரமும்

மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில் மருகனிசி சரர்தளமும் வருதார காசுரனும்

மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி மறுகிமுறை யிடமுனியும் வடிவேல னீலகிரி

மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுர வசனிபயி ரவிகவுரி யுமையாள்த்ரி சூலதரி

வநசைமது பதியமலை விசயைதிரி புரைபுநிதை வநிதையபி நவையநகை யபிராம நாயகிதன்

மதலைமலை கிழவனநு பவனபய னுபயசதுர் மறையின்முதல் நடுமுடிவின் மணநாறு சீறடியே.

சுருக்கவுரை

முருகன் திருவடிச் சிறப்பு

  • கடலிடத்தே நூறுகோடி சூரியர்கள் உதயமாவது போல யுகாந்த காலத்தில் மயில் மீது தோன்றி ஜோதி வீசுவதும்,
  • சிவயோகத்தினர் தமது ஞானக்கண்ணூடே நாடுவதும்,
  • இறைவனுக்கு உருவம் உண்டு, உருவம் இல்லை என்றெல்லாம் கூறி அலையும் சமய கலைகளின் கூச்சலடங்க – உண்மைப் பொருளை உணர்ந்தவர்களின் அனுபவ ஞானமாய் விளங்குவதும்,
  • மனைவி மகவு என்னும் அலயிற் சிக்கலுறும் பிறவிக்கடலைத் தாண்ட உதவும் தோணி போன்றதும்,
  • துறைமுகம் போன்றதும், தேவர்களின் மணி முடியில் விளங்குவதும்,
  • அழிவிலாததும்,
  • என் உள்ளத்துக்கு உகந்ததும்,
  • சிவபிரான் மகிழப் பார்வதி தழுவும் திருமார்பில் ஆடுவதும்,
  • தேவர்கள் பொன்னுலகிற் குடியேற, அசுரர்களின் வயிற்றில் எரிபுக, ஆதிசேடனது முடிகள் நெறு நெறென, மேரு இடிய விளையாடல் புரிந்ததும்,
  • கணபதியுடன் போட்டியிட்டு உலகை ஒரு நொடியில் வலம் வந்ததும்,
  • கொடிய மிருகங்கள் நிறைந்த காட்டில், பரண்மீதிருந்து ஆயால் ஓட்டியிருந்த வள்ளியின் தினைப் புனத்தில் உலவி நின்றதும்,
  • கால தூதர்களை ஓட்டி வெருட்டுவதும்,
  • அருள் வழியைப் பற்ற உதவுவதும்,
  • நினைத்த காரியத்தை முடித்து உதவுவதும்,
  • அடியார்களின் கோடிக்கணக்கான பகைகளை நீக்குவதும்,
  • மலர்களின் நறுமணம் வீசுவதும்,
  • எவற்றிலும் முதன்மைத் தானத்தைத் தருவதும்,
  • முநிவர்களின் தபோபலமாய் விளங்குவதும்,
  • ‘முருக!’, ‘குமர!’ சரணம் என்று பாடி ஆடி அழுகின்ற அடியார்களின் கண்ணருவியில் முழுகுவதும்,
  • ‘வருக, வருக’ என்று கூவி அழைத்து ஆண்டருளுவதும்,
  • அடியேனது கவிமாலை யாவற்றையும் சூடி அருளுவதும்,

        எது என்றால் யானையை முதலை வாயினின்றும் மீட்டவனும், இரணியனை அட்டவனும், மாவலியைச் சிறையிலிட நீண்டவனும், இராவணனைச் சங்கரித்தவனும் ஆன திருமாலின் மருமகனும், தாருகன் கிரவுஞ்சன், கடல் இவைதமை அட்டவனும், தணிகேசனும், பார்வதியின் குமாரனுமான மலைக் கிழவனாம் முருகவேளின் – வேதத்தின் அடி நடு முடிவில் நறுமணம் வீசுவதான – சீறடியே ஆகும்.

பொழிப்புரை

முருகன் திருவடிச் சிறப்பு

திருவகுப்பு
1. சீர்பாத வகுப்பு
2. தேவேந்திர சங்க வகுப்பு
3. வேல் வகுப்பு
4. திருவேளைக்காரன் வகுப்பு
5. பெருத்த வசன வகுப்பு
6. பூத வேதாள வகுப்பு
7. பொருகளத் தலகை வகுப்பு
8. செருக்களத் தலகை வகுப்பு
9. போர்க்களத் தலகை வகுப்பு
10. திருஞான வேழ வகுப்பு
11. திருக்கையில் வழக்க வகுப்பு
12. வேடிச்சி காவலன் வகுப்பு
13. சேவகன் வகுப்பு
14. வேல்வாங்கு வகுப்பு
15. புய வகுப்பு
16. சித்து வகுப்பு
17. கடைக்கணியல் வகுப்பு
18. சிவலோக வகுப்பு
19. மயில் வகுப்பு
20. கொலு வகுப்பு
21. வீரவாள் வகுப்பு
22. சிவகிரி வகுப்பு
23. திருச்செந்தில் வகுப்பு
24. திருப்பழநி வகுப்பு
25. திருப்பரங்கிரி வகுப்பு