3. திருவேளைக்காரன் வகுப்பு
தானதன தத்ததன தானதன தத்ததன தானதன தத்ததன தானத் தானன
ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது வாகநிகழ் பத்தசன வாரக் காரனும்
ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய
னாருடனு ணக்கைபரி தீமைக் காரனும்
ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில்
ஆசையொடு சுற்றுமதி வேகக் காரனும்
ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியநு
பூதியடை வித்ததொரு பார்வைக் காரனும்
ஆடலைவு பட்டமரர் நாடதுபி ழைக்கஅம
ராவதிபு ரக்குமடல் ஆண்மைக் காரனும்
ஆடகவி சித்ரகன கோபுரமு கப்பில்அரு
ணாபுரியில் நிற்கும்அடை யாளக் காரனும்
ஆயிரமு கத்துநதி பாலனும கத்தடிமை
யானவர் தொடுத்தகவி மாலைக் காரனும்
ஆறுமுக வித்தகனும் ஆறிருபு யத்தரசும்
ஆதிமுடி வற்றதிரு நாமக் காரனும்
யானெனதெ னச்சருவும் ஈனசம யத்தெவரும்
யாரும்உணர் தற்கரிய நேர்மைக் காரனும்
யாதுநிலை யற்றலையும் ஏழுபிற விக்கடலை
யேறவிடு நற்கருணை யோடக் காரனும்
ஏரகம் இடைக்கழிசி ராமலைதி ருப்பழநி
யேரணிசெ ருத்தணியில் வாசக் காரனும்
ஏழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையி
ராமல்விடு வித்தருள்நி யாயக்காரனும்
யாமளைம ணக்குமுக சாமளைம ணிக்குயிலை
யாயெனஅ ழைத்துருகு நேயக் காரனும்
ஏதமற நிச்சயம னோலயவி ளக்கொளியும்
யாகமுநி வர்க்குரிய காவற் காரனும்
ஈரிரும ருப்புடைய சோனைமத வெற்பிவரும்
யானையள விற்றுவளும் ஆசைக் காரனும்
ஏடவிழ்க டப்பமலர் கூதளமு டிக்கும்இளை
யோனும்அறி விற்பெரிய மேன்மைக் காரனும்
வானவர்பொ ருட்டுமக வானதுபொ ருட்டுமலர்
வாவியில்உ தித்தமுக மாயக் காரனும்
வாரணப திக்குதவு நாரணனு வக்குமரு
மானும்அய னைக்கறுவு கோபக் காரனும்
வாழியென நித்தமற வாதுபர விற்சரண
வாரிசம்அ ளிக்கும்உப காரக் காரனும்
மாடமதில் சுற்றியத்ரி கூடகிரி யிற்கதிர்செய்
மாநகரி யிற்கடவுள் ஆயக் காரனும்
வாளெயிற துற்றபகு வாய்தொறுநெ ருப்புமிழும்
வாசுகியெ டுத்துதறும் வாசிக் காரனும்
வாளகிரி யைத்தனது தாளிலிடி யப்பொருது
வாகைபுனை குக்குடப தாகைக் காரனும்
மாசிலுயி ருக்குயிரு மாசிலுணர் வுக்குணர்வும்
வானிலணு வுக்கணுவு பாயக் காரனும்
வாதனைத விர்த்தகுரு நாதனும்வெ ளிப்படம
காடவியில் நிற்பதொர்ச காயக் காரனும்
மீனவனு மிக்கபுல வோருமுறை பொற்பலகை
மீதமர்த மிழ்த்ரயவி நோதக் காரனும்
வேரிமது மத்தமதி தாதகிக டுக்கைபுனை
வேணியர்து திப்பதொரு கேள்விக் காரனும்
வேலைதுகள் பட்டுமலை சூரனுடல் பட்டுருவ
வேலையுற விட்டதனி வேலைக் காரனும்
மீனுலவு கிர்த்திகைகு மாரனுநி னைக்குமவர்
வீடுபெற வைத்தருள்உ தாரக் காரனும்
மேனையரி வைக்குரிய பேரனும தித்ததிறல்
வீரனும்அ ரக்கர்குல சூறைக் காரனும்
வேதியர்வெ றுக்கையும்அ நாதிபர வஸ்துவும்வி
சாகனும்வி கற்பவெகு ரூபக் காரனும்
வேடுவர்பு னத்திலுரு மாறிமுனி சொற்படிவி
யாகுலம னத்தினொடு போம்விற் காரனும்
மேவியபு னத்திதணில் ஓவியமெ னத்திகழு
மேதகு குறத்திதிரு வேளைக் காரனே
சுருக்கவுரை
முருகனுக்கு உகந்த நாயகி
வள்ளியுடன் பொழுது போக்கும் முருகன் யாரெனில் – கூறுகேன் :-
அவன்
- பத்தி வழியே முத்தியாம் என ஒழுகும் பக்தர்களின் மீது அன்பு கொள்பவன்
- தமையனாம் கணபதியுடன் பழத்துக்காகப் போட்டியிட்டவன்
- வேத ஆகமங்களுக்குக் காரணபூதனாய் நின்று உலகை ஒரு நொடியில் சுற்றி வந்தவன்
- ஆணவத்தை அடக்கி அநுபூதியை அளித்தவன்
- தேவர் உலகைப் பிழைக்க வைத்து, அவர்கள் ஊரைக் காப்பாற்றியவன்
- திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் அடையாள மூர்த்தியாய் விளங்குபவன்
- கங்கையின் புத்திரன்; அடியார்கள் சூடும் கவிமாலையைப் புனைந்து கொள்பவன்
- அறுமுகன், பன்னிருபுயன், கணக்கிலாத திருநானமங்களை உடையவன்
- யான் – எனது என்னும் அகங்கார – மமகாரங்களைக் கொண்டவர்களுக்கு அகப்படாதவன்
- பிறவிக் கடலைத் தாண்ட உதவும் கருணை ஓடக்காரன்
- திருவேரகம், திருவிடைக்கழி, திரிசிராப்பள்ளி, பழநி, திருத்தணி என்னும் தலங்களில் வாசம் செய்பவன்
- எனது உடற்சிறையைட் தொலைத்த நீதிமான்
- பார்வதியைத் தாய் என அழைக்கும் சேய்
- மனோலயத்தைத் தரும் ஒளி, யாகத்தைப் புரக்கும் காவல்தெய்வம்
- தேவசேனையின் ஆசைநாயகன்
- கடப்பமலர், கூதளமலர் அணிபவன்; அறிவிற்பெரியோன்
- தேவர்கள் பொருட்டு சரவணத்தில் அறுமுகனாய் உதித்தவன்
- திருமாலின் மருகன்; பிரமனைக் கோபித்தவன்
- வாழி என்று கூறி வணங்குபவர்க்குத் தன் திருவடியைத் தருபவன்
- குற்றாலம், கதிர்காமம் போன்ற தலங்களில் தேவர்கூட்டத்தில் விளங்குபவன்
- வாசுகி என்னும் பெரும்பாம்பை எடுத்து உதறும் மயிலை உடையவன்
- சக்ரவாளகிரியைக் காலால் இடித்துப் பொடிபடுத்தவல்ல கோழியைக் கொடியிற் கொண்டவன்
- உயிர்க்கு உயிராய், உணர்வுக்கு உணர்வாய், அணுவிற்கு அணுவாய் விளங்குபவன்
- என் வாசனாமலத்தைத் தொலைத்த குருமூர்த்தி, பெருங்காட்டில் வெளிப்பட்டு எனக்குத் துணை நின்ற சகாயமூர்த்தி
- தமிழ்ச் சங்கப்பலகையில் வீற்றிருந்த விநோதன்
- சிவனும் துதிக்கும்படியான ஞானமூர்த்தி
- கடல் அலற, சூரன் உடல் உருவ, வேலை ஏவியவன்
- கிர்த்திகை மைந்தன், தியானிப்பவர்களுக்கு வீட்டின்பைத் தருபவன்
- பார்வதியின் தாய் மேனையின் பேரன்; திறல் வீரன்; அர்க்கர்க் குலத்தைச் சூறையாடியவன்
- வேதியர்களின் செல்வம், பரமாத்மா, விசாகன், பல உருவம் கொள்பவன்
- நாரதரின் பேச்சைக் கேட்டு, வேடர்களின் தினைப்புனத்தில் வேற்றுருவுடன் கவலை மனத்தனாய் வில்லேந்திச் சென்றவன்
பொழிப்புரை
முருகன் திருவடிச் சிறப்பு