பெருத்த வசன வகுப்பு
தனத்த தனதன தனத்த தனதன
அருக்கன் உலவிய சகத்ர யமுமிசை
யதிற்கொள் சுவையென அனைத்து நிறைவதும்
அவஸ்தை பலவையு மடக்கி யகிலமும்
அவிழ்ச்சி பெறஇனி திருக்கு மவுனமும்
அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும்
அரற்று வனபொருள் விகற்ப மொழிவதும்
அழுக்கு மலவிருள் முழுக்கின் உழல்வதை
யடக்கி யவநெறி கடக்க விடுவதும்
எருக்கும் இதழியு முடிக்கும் இறைகுரு
எமக்கும் இறையவன் எனத்தி கழுவதும்
இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல்
இணக்கம் அறவொரு கணக்கை யருள்வதும்
இருக்கு முதலிய சமஸ்த கலைகளும் இதற்கி
தெதிரென இணைக்க அரியதும்
இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர்
கடக்க விடுவதொர் இயற்கை யருள்வதும்
நெருக்கு வனவுப நிடத்தின் இறுதிகள்
நிரப்பு கடையினில் இருப்பை யுடையதும்
நெருப்பு நிலம்வெளி மருத்து வனமென
நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும்
நினைப்பு நினைவது நினைப்ப வனும்அறு
நிலத்தில் நிலைபெற நிறுத்த வுரியதும்
நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட
நிவிர்த்தி யுறஅநு பவிக்கு நிதியமும்
உருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர
உளத்தொ டுரைசெயல் ஒளித்து விடுவதும்
ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென
உயிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும்
உரத்த தனிமயில் உகைத்து நிசிசரர்
ஒளிக்க அமர்பொரு சமர்த்தன் அணிதழை
உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன்
ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே.
சுருக்கவுரை
முருகன் திருவாய் மலர்ந்த உபதேச மொழி
மயில்வாகனனும், அசுரன் அஞ்சி ஒளிக்கப் போற் புரிந்தவனும், குறமகள் மணாளனுமான அறுமுகவள்ளல் எனக்குப் போதித்த பெருமை வாய்ந்த உபதேச மொழியானது –
- மூவுகலங்களும் அவற்றில் உள்ள இன்பச் சுவைகள் யாவும் இதுவே என்னும்படி நிறை பொருளாய் இருப்பது;
- சகல வேதனைகளையும் தவிர்க்கும் இன்ப மௌன நிலையைக் கூட்டி வைப்பது
- சமயவாதிகளின் மாறுபாடுகளைக் கடக்க வல்லது
- மலங்களாம் பாவ நெறியினின்றும் விலக்குவது
- சிவபிரானும் முருகன் உபதேசச் சிறப்பை உணர்ந்து முருகனே எமக்குக் குருநாதன் என வியக்கும் நிலையில் அவரை ஈடுபடுத்துவது
- வினைகளுக்கு இடமான பிறப்பை ஒழிப்பது
- எந்த கலையும் இதற்கு நிகராகாது எனத் திகழ்வது
- யமதூதர்களை வெருட்ட வல்லது
- வேத முடிவுக்கும் முடிவாய் விளங்குவது
- பஞ்சபூதங்களின் ஆற்றலுக்கு அகப்படாது ஒளித்து நிற்பது
- நினைப்பு, மறப்பு அற்ற பெருநிலையில் நிறுத்துவது
- அடியவர்கள் மயங்காவண்ணம் அவர்களுக்கு விடுதலையைத் தரும் செல்வப் பொருளாய் உதவுவது
- மனம், வாக்கு, காயம் இவைகளின் செயலை அடக்கவல்லது
- ஒளிக்கும் ஒளியாய், வெளிக்கும் வெளியாய், உயிர்க்கும் உயிராய் விளங்குவது
பொழிப்புரை
பொழிப்புரை